Pages

Saturday, September 21, 2019

எம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.21
திமுக எம்.பி திருச்சி சிவாவுடன் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்து திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பர் நியமிக்க, பகல் நேர விரைவு ரயில் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் எஸ் ஆர் என் செந்தில்குமார், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என் ஜெயராமன், ஒருங்கிணைப்பாளர் எம் கலியபெருமாள் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரயில்வே குழு தலைவர் திருச்சி என்.சிவா அவர்களை 20.09.2019 அன்று திருவாரூரில் நேரில் சந்தித்து, திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதைக்கு தேவையான கேட்கீப்பர்கள நியமிக்கவும் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இரவு மற்றும் பகல் நேர விரைவு வண்டிகள், மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு மீட்டர்கேஜ் ஓடியது போல பயணிகள் ரயில்கள், வருகின்ற தீபாவளிக்கு காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரயில்களை இயக்கரயில்வே நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க கோரி கோரிக்கை மனுவை அளித்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட திருச்சி என்.சிவா, இரயில்வே நிர்வாகத்தை சந்தித்து ஆவன செய்வதாக கூறினார்.
 

Friday, September 20, 2019

மரண அறிவிப்பு ~ N.M.S ரியாஸ் அகமது (வயது 50)

அதிரை நியூஸ்: செப்.20
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் என்.எம்.எஸ் அகமது ஜலாலுதீன் அவர்களின் மருமகனும், ஹாஜி என்.எம்.எஸ் முகமது மன்சூர் அகமது, ஹாஜி என்.எம்.எஸ் ஜமால் முகமது, என்.எம்.எஸ் அப்துல் வஹாப், என்.எம்.எஸ் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும், எம்.சாகுல் ஹமீது, என்.ஏ முகமது யூசுப் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் பசீர் அகமது, என்.எம்.எஸ் ஜாஹிர் உசேன், என்.எம்.எஸ் முகமது சுல்தான், மர்ஹூம் என்.எம்.எஸ் ஜெஹபர் சாதிக் ஆகியோரின் மச்சானும், அல் அமீன், நவீத்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M.S ரியாஸ் அகமது (வயது 50) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (20-09-2019) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, September 19, 2019

கிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணி:பொறியாளர்கள் குழு ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 19
கிழக்குக் கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணியை பொறியாளர்கள் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

உலக வங்கி நிதி உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலையான நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை 107.20 கிலோ மீட்டர் நீளத்திற்கான  மாநில நெடுஞ்சாலையானது, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலான பராமரிப்பு, ஒப்பந்த அடிப்படையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாய் ஹருதம் என்பவரால் ஐந்து வருட காலத்திற்கு பராமரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்று வரும் 4-ஆம் ஆண்டிற்கான சாலை புதுப்பித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப்பணிகளை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வி தலைமையில் பொறியாளர்கள் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில், சாலையின் தன்மை, பணியின் தரம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது. இதில் கோட்ட பொறியாளர் வெங்கடாஜலம், திட்ட மேற்பார்வை ஆலோசகர் சுந்தரம், ஒப்பந்த சாலை மேலாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள் லதா, எழிலரசி மற்றும் உதவிப் பொறியாளர் சரண்யா ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு: எம்.எல்.ஏ சி.வி சேகர் தகவல்!

அதிராம்பட்டினம், செப்.19
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பதற்கு ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

2018-2019 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வடக்கு பகுதியில் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தகவல் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் மாசுபாடு, நீர்மட்டம் அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், செப். 19
காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பில் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 50 க்கும் மேற்பட்ட காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவ, மாணவிகள், நிலத்தடி நீர் எவ்வாறு மாசுபடுகிறது?, அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் நீர் மட்டம் உயர்த்தும் வழிமுறைகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.அப்பாஸ் செய்திருந்தார்.
 

Wednesday, September 18, 2019

அதிராம்பட்டினம் அருகே பழங்கால சிலை கண்டெடுப்பு: பொன். மாணிக்கவேல் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஒரத்தநாடு பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளி கொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில், வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது ஐந்து அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது நடராஜர் சிலை 5 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடை உள்ளது தெரிந்தது. மேலும், சிலைகள் இருக்கும் தடயம் தெரிவதால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி சிலைகள் உள்ளதா என ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார். மேலும், இப்பகுதியில் அடுத்தடுத்து சிலைகள் உள்ளதா என கண்டறிய மெட்டல் டிடெக்டர் வரவழைக்கப்பட உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பிக்கள் ராஜாராம், மலைசாமி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகரன், முகேஷ், எஸ்.ஐ ராஜேஸ்குமார், ஆர்ஐ ரவிச்சந்திரன், அறநிலையத் துறை பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் கருணாநிதி, செயல் அலுவலர் சண்முகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

மேலும் கண்டெடுக்கப்பட்ட சிலையை அதிராம்பட்டினம் அபய வரதேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பு பிரிவு போலீஸார்  இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்க்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசித்து வருகின்றனர். அனைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் முகாமிட்டுள்ளனர்.
 
 
 
 

பம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரிக்கை!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு தடையின்றி நீர் நிரப்ப பம்பிங் ஸ்டேஷனுக்கு 24 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் இன்று புதன்கிழமை காலை கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அதிரை பேரூராட்சி பொதுநிதி சுமார் ₹ 50 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு பணிகள் நடந்து முடிந்து செயல்பாட்டுக்கு வந்தது. கிராமப்புற மின் இணைப்பு என்பதால், பகலில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் பெற முடிந்தது. இதனால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, குளங்களுக்கு நீர் நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டன.

இந்நிலையில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் சந்தித்து
நகர்புற மின்னூட்டிகளில் இருந்து மும்முனை மின்சாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, எம்.எல்.ஏ சி.வி சேகர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டு உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அப்போது, அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷை சந்தித்து மின்சார வாரியம் மூலம் தடையில்லா மும்முனை மின்சாரம் பெற வேண்டிய அலுவல் பூர்வ பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

AAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.18
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை இன்று புதன்கிழமை காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து அதிராம்பட்டினம் பொதுநலன் சார்ந்த 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ  அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பழுதடைந்த அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைப்பு, அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் வழியாக மன்னார்குடி மற்றும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரடி அரசுப் பேருந்து இயக்கவும், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ரயில் நிலையம் வரையிலான சுமார் 650 மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் மனுவில் கூறியிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
 

அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 73 பேருக்கு கண் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 3 பேருக்கு ஐ.ஓ.எல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 27 பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடும், 12 பேருக்கு தூரப்பார்வை குறைபாடும் கண்டறியப்பட்டன.

இம்முகாமில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.அப்துல் ரஹ்மான், என்.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முகாம் ஏற்பாட்டினை தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.
 

அதிராம்பட்டினம் அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் ஆசிரியர்கள் இருவர் பலி!

அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் அரசுப் பள்ளிஆசிரியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமேடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பிரபாகரன், செந்தில் நாதன். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மகிழங்கோட்டை அருகே வந்தபோது, எதிரில் வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் நிகழ்விடத்திலேயே செந்தில் நாதன் உயிரிழந்தார். கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரபாகரன் ஆம்புலன்சில கொண்டு செல்லப்பட்டார். ஒரத்தநாடு தென்னமாடு - வல்லம் பிரிவு சாலையில் சென்றபோது, எதிரே மாடு வந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியது. தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரன் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
 
 

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.18
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 70 வது மாதாந்திரகூட்டம் கடந்த 13-09-2019 அன்று ரியாத்மாநகர் ஹாராவில் இனிதே நடைபெற்றது.     

நிகழ்ச்சி நிரல்:
கிராஅத்            முகமது சித்திக் (உறுப்பினர்)
முன்னிலை     S.சர்புதீன் (தலைவர்)
வரவேற்ப்புரை அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை        A.M அஹ்மது ஜலில் (செயலாளர்)                           
மாதஅறிக்கை மன்சூர் ஷேக் (துணை செயலாளர்)
நன்றியுரை     A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1. அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் ABM-ன் குர்பானி திட்டத்தில் பைத்துல்மால் தலைமையகம் மிகவும் சிறப்பாக பணியாற்றி நல்லதொரு இலாபகரமாக பொருளாதார தொகையை ஈன்று அதன் மூலம் அதிரை ஏழை எளிய மக்களின் சேவை திட்டத்திற்கான பங்களிப்பை செலுத்திய
அனைவருக்கும் அமர்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. WELFARE CREDIT SYSTEM  விசயமாக அதன் முழு விளக்கங்களையும் தெளிவுபடுத்தப்பட்டு விருப்பமுள்ள சகோதரர்கள்; பொறுப்புதாரிகளிடம் தங்களின் பெயர்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.AGRA அமைப்பின் சேவையை பாராட்டியதோடு அதன் பொறுப்புத்தாரியுடன் தொடர்புகொண்டு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் அதன் முழுவிபரங்களையும் அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டியதை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமர்வில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. புதிதாக துவங்கப்பட்ட கத்தார் ABM-கிளைக்கு, ரியாத் ABM-கிளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இதுபோன்று பல நாடுகளிலும் புதிய கிளைகளை உருவாக்க வேண்டி அமர்வில் தீர்மானம் போடப்பட்டது.

5. கடந்த 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து முடித்துவிட்டு தாயகம் சென்ருறிருக்கும் ஜம்ரூத் முகமது அவர்கள் ரியாத் பைத்துல்மால் ஆரம்ப துவக்கத்திலிருந்து  உறுப்பினராக இருந்து நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் தந்துள்ளார். அவருடைய பணிக்காக வாழ்த்துக்களையும் நன்றியும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

6. இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு 11-10-2019 அன்று நடைபெறும்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

Tuesday, September 17, 2019

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடக்கம்!

பட்டுக்கோட்டை, செப். 17
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் தூய்மை இந்தியா இயக்கம், நகர்புற வாழ்வாதார திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று(17.09.2019) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்திட  3 இடங்களில் தலா ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சிறுஉரக்குடில்கள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்திட ரூபாய் 50.40 லட்சம் மதிப்பீட்டில் 9 இலகு ரக வாகனங்கள் மற்றும் ரூபாய் 30.60 லட்சம் மதிப்பீட்டில் 17 பேட்டரி வாகனங்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண்-23, அண்ணாநகர் பிரதான சாலையில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வீடற்றோர்கான தங்குமிடம், பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 7 தட்டான்குளம் பகுதி நேருநகரில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ரூபாய் 8000 கோடிக்கு மேல் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வளர்ச்சி அடைவதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு  வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை நகராட்சி 1965ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 55ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல உயர்ந்த மனிதர்களை உருவாக்கிய ஊர் பட்டுக்கோட்டையாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரின் ஆட்சி காலங்களில் பட்டுக்கோட்டைக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பேசினார்.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகராட்சியில் 21174 குடியிருப்புகளில் 275 வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு வீட்டில் உரக்குழி அமைத்து உரம் தயாரிப்பதில் சிறப்பாக செயல்படுத்தி மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 21174 குடியிருப்புகளில் 15,437 குடியிருப்புகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து  கொடுப்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சிறப்பாக செயல்படுத்திய டாக்டர்.தமிழரசன் என்பவருக்கும், அரசு குளங்களை சுத்தப்படுத்தி தூர்வாரிய தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன், முன்னாள் தென்னை வளர்ச்சிக்குழு உறுப்பினர் மலை அய்யன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்(பொ) பாஸ்கர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...