.

Pages

Tuesday, January 29, 2019

திருச்சி இனாம்குளத்தூர் இஜ்திமா மாநாடு நிறைவு ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜன.29
தமிழ்நாடு இஜ்திமா மாநாடு திருச்சி அருகே, இனாம்குளத்தூரில் ஜன.26, 27, 28 ஆகிய 3 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த மாநாட்டில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர் சொற்பொழிவு ஆற்றினர். இதில், இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள், நற்பண்புகள், மறுமை வாழ்வு பற்றிய சிந்தனைகள் இடம் பெற்றது. நேற்று (ஜன.28) திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற மாநாட்டின் நிறைவில் தப்லீக் ஜமாத் அகில உலக பொறுப்பாளர் டெல்லி முகமது சாத் மவுலானா சொற்பொழிவை இந்தி மொழியில் நிகழ்த்தினார். அதன் தமிழாக்கத்தை திருச்சி ரூஹுல் ஹக் மவுலான மொழி பெயர்த்தார். இதன், பின்னர், 30 நிமிஷங்கள் சிறப்பு துஆ ஓதப்பட்டன. இறை அச்சத்தோடு வாழ்தல், இம்மை மற்றும் மறுமைக்கான வாழ்வு, உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழவும், பிறருக்கு உதவுதல், கீழ்படிதல், உதவி புரிவது, தொண்டு புரிதல், ஈமானோடு இறுதி வரை இருப்பது, இறைவன் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வாழ்வது உள்ளிட்டவை பிரார்த்தனையில் இடம்பெற்றது.

மாநாடு துளிகள்:
1. திருச்சி ~ திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டிபுதூரில் இருந்து இனாம்குளத்தூர் வரை லட்சக்கணக்கானோர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

2. வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டது. குடிநீர் வசதி, குளியல் அறை, உணவு, கழிவறை, தூங்குவதற்கான இடம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் என அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

3. இரவை பகலாக்கும் வகையில் மாநாட்டு திடல் மற்றும் மக்கள் வந்து செல்லும் பகுதி முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

4. மாநாட்டில் நபிவழி சுன்னத் அடிப்படையில் சுமார் 150 க்கும் மேபட்டோருக்கு எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

5. வாய் பேசாத  ~ காது கேளாத வருகையாளர்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

6. ஒளு செய்வதற்கு, கழிப்பறை, சிறுநீர் கழிக்க மாநாட்டின் மைதானப் பகுதிகளில் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், திருச்சி சுற்றுவட்டார நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள இடங்களில் இஜ்திமா வருகையாளர்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

7. மாநாட்டில்,  தமிழகத்தின் தென் ஆற்காடு (01), கோவை (02), வெளி மாநிலங்கள் (03), இராமநாதபுரம் (04), சேலம் (05), மதுரை (06), புதுக்கோட்டை (07), திருநெல்வேலி (08), பாரா ஜமாத் (09), திருச்சி (10), தஞ்சாவூர்(11), வட ஆற்காடு (12 ), செங்கல்பட்டு (13), சென்னை (14) என 14 மண்டலங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டன. இப்பகுதிகளில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்தோர் அமர்ந்து இருந்தனர்.

8. ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தனித்தனியாக உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு அதில், இரவு, காலை, பகல் ஆகிய 3 வேளைகளுக்கான உணவு பரிமாறப்பட்டது. இப்பணிகளில் தன்னார்வ களப்பணியாளர்கள் ஈடுபட்டனர்.

9. மாநாட்டில் மருத்துவ முதலுதவிக்காக மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

10. மாநாட்டு வருகையாளர்களுக்கு வழிகாட்ட பிரதான சாலைப் பகுதிகளில் 'வழிகாட்டி பதாகைகள்' ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தன.

11. மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க நூல்கள், தொப்பி, அத்தர், பழங்கள், சிப்ஸ், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், பேக்கரி கேக் வகைகள், பட்டர் பிஸ்கட்ஸ், மலைத்தேன், பனங்கருப்பட்டி, மசாலா பவுடர், சூப், சுண்டல் ஆகியவை விற்பனைக்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

11. மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வசதியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டுன. வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் இனாம்குளத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றன. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து மாநாட்டு நடைபெறும் இடத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

12. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, டெல்லி, பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலங்கை, சவுதி, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் வந்து குவிந்தனர்.

13. மாநாட்டின் நிறைவில் நடைபெற்ற சிறப்பு துஆவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

14. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இஸ்லாமிய தன்னர்வல இளைஞர்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தியதோடு அதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

15. வெளியூர் செல்லும் ஜமாத்தினர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. குறிப்பாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

16. மாநாட்டு திடல் நிரம்பி வழிந்ததால் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் வெளியில் நின்றபடி துஆ வில் கலந்து கொண்டனர். 

17. இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 1983 ஆம் ஆண்டும், மேல்விஷாரத்தில் 1997 ஆம் ஆண்டும் பிரமாண்ட இஜ்திமா மாநாடுகள் நடைபெற்றன. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்தக்கது.

மாநாட்டில் இருந்து... 
எம். நிஜாமுதீன், 
ஏ.சாகுல் ஹமீது, 
பாருக், காதர்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.