.

Pages

Monday, January 7, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் நிறைவு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.07
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் விஞ்ஞானிகள் திட்ட முகாம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த டிச.24 ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இம்முகாமில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் 49 பேர் பங்குபெற்றனர். இதில், கணிதம், கணினி, இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் குறித்த பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இதன் நிறைவு விழா காதிர் முகைதீன் கல்லூரி அரங்கில் இன்று திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

விழாவை கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்து பேசுகையில்; 
அறியாமையை போக்குவது கல்வி ஒன்றுதான். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைத் தகர்க்கக்கூடிய சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. இம்முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்கள் எதிர்காலத்தில் தலை சிறந்த விஞ்ஞானியாகவும், ஆராய்சியாளராகவும் திகழ வேண்டும். மறைந்த மாமேதை ஏ.பி.ஜெ அப்துல் கலாம் கனவை நனவாக்குவதிலும், நாட்டை வல்லரசாக உயர்த்துவதிலும் மாணவர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும்' என்றார்.

கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் ஆற்றிய தலைமை உரையில்; 
'அறிவியல் அறிவில் சிறந்த விளங்க மொழி அறிவு அவசியம். மொழி அறிவை வளர்த்துக்கொள்ள மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். தாய்மொழியில் கல்வி கற்பது அவசியம். அதோடு உலகப் பொது மொழி ஆங்கிலமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு மாணவர்களுக்கு பொது அறிவு அவசியம். அவற்றை மேம்படுத்துவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்ள வேண்டும். இந்த பாடத்தைதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. விரும்பும் பாடத்தை தேர்வு செய்து படிப்பதன் மூலம் அத்துறையில் சிறந்து விளங்க முடியும்' என்றார்.

சிறப்பு விருந்தினராக அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி புல முதல்வர் ஜி.இளங்கோவன் கலந்துகொண்டு பேசியது;
அறிவு என்பது குழந்தை பருவத்திலேயே வந்துவிடும். அதை பக்குவப்படுத்தி கொண்டுசெல்வது பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் மட்டுமே முடியும். அவற்றை செய்ய நாம் தவறி விடுகிறோம். செடி வளர்வது போன்றுதான் ஒரு குழந்தையின் வளர்ச்சியும். முதல் 5 ஆண்டுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி, நல்ல விசயங்களை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். அதுதான் பிற்காலத்தில் நல்ல பலனைத்தரும். தினமும் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்ளவேண்டும். அவர்களிடம் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கேட்டறிய வேண்டும். குழந்தைகள் மீது பெற்றோர் அன்பு செலுத்தவேண்டும். அதுபோன்று, மாணவர்கள். பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் உண்மையாகவும், அன்பாகவும் பழகினால் நமக்கு தேவையான அறிவு தானாக நம்மைத் தேடி வரும். தற்போது அடிப்படை கல்வி பயின்று வரும் நீங்கள் உங்களது ஆர்வம் எதில் உள்ளது என்பதை அறிந்து, அதில் கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு செயலிலும் அதிக ஆர்வமும், ஈடுபாடும் இருந்தால், எதிர்காலத்தில் நாம் சாதிக்க முடியும்' என்றார்.

விழாவில், இடம்பெற்ற வேதியியல் தொழில்நுட்பம் மூலம் மறுசுழற்சி முறையில் ஹைட்ரஜன் வாயு தயாரித்தல், மழைநீர் சேகரிப்பு, பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட அறிவியல் மாதிரி படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

நிறைவில் முகாமில் கலந்துகொண்ட 49 பேருக்கும் 'இளம் அறிவியல் விஞ்ஞானிகள்' பயிற்சி சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. குமாரசாமி  வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை முகாம் அமைப்பாளர் பேராசிரியர் அ.  அம்சத் தொகுத்து வழங்கினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.

முகாமில், கல்லூரி துணை முதல்வர் எம். முகமது முகைதீன், கல்லூரிப் பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி.கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி மற்றும் பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.