.

Pages

Thursday, February 28, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் 64-வது ஆண்டு விளையாட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி 64-வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், கல்லூரிச்செயலர் எஸ்.ஜெ அபுல்ஹசன் தலைமை ஏற்று இந்திய தேசியக் கொடி ஏற்றினார். பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி போட்டியை தொடங்கி வைத்து மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். சர்வதேச கால்பந்து விளையாட்டு வீரர் ஒலிம்பியன் சைமன் சுந்தர்ராஜ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கே.முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்து முடிவில் நன்றி கூறினார். இவ்விழாவில், கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலக, ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

மின்னொளியில் ஜொலிக்கும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.  இந்த வழித்தடத்தில் உள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் பிளாட் பார்ம் 1ல் நடைபெற்று வந்த எலெக்ட்ரிக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இரவில், மின்விளக்குகள் ஏரியவிடப்பட்டுள்ளது. இதனால், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் இரவில் மின்னொளியில் ஜொலித்து வருகிறது.

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து...
சேக்கனா நிஜாம் (எம்.நிஜாமுதீன்)
ஏ.சாகுல் ஹமீது
 

Wednesday, February 27, 2019

மரண அறிவிப்பு ~ முகமது மரியம் (வயது 65)

அதிரை நியூஸ்: பிப்.27
அதிராம்பட்டினம், கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் சர்க்கரை தம்பி என்கிற அப்துல் லத்தீப் அவர்களின் மகளும், மர்ஹும் மக்கம் என்கிற அபூக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் முகமது சதக்கத்துல்லா அவர்களின் மனைவியும், ஜஹாங்கீர், அப்துல் லத்தீப் ஆகியோரின் தாயாருமாகிய முகமது மரியம் (வயது 65) அவர்கள் இன்று தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (27-02-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ ஹாஜி த.அ சேக் மதீனா (வயது 55)

அதிரை நியூஸ்: பிப். 27
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி த.அ அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், ஹாஜி த.அ சேக் அலி, ஹாஜி த.அ தமீம் அன்சாரி ஆகியோரின் சகோதரரும், முகமது ஜாபிர் அவர்களின் தகப்பனாரும், முகமது இஸ்மாயில் அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி த.அ சேக் மதீனா (வயது 55) அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று (27-02-2019) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Tuesday, February 26, 2019

விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த பயிற்சிக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகாலில் காவல் துறையினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த பயிற்சி கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் முன்னிலையில் இன்று (26.02.2019) நடைபெற்றது.

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை செயல்படுத்துதல், தேர்தல் தொடர்பான குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்களை தடுத்தல், வேட்பாளர்களின்  பிரச்சாரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பணி மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து காவல் துறை அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

பயிற்சி கூட்டத்தில் தேர்தலின் போது காவல் துறையினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விளக்கி கூறினார். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

பின்னர், காவல் துறை அலுவலர்களுக்கு விவிபேட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்தர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காதிர் முகைதீன் கல்லூரி சார்பில் கீழத்தோட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் கீழத்தோட்டம் ஊராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசியது;
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு ஆளுமையாக மாற்றம் செய்யும் உன்னத பணியை நாட்டு நலப்பணித்திட்டம் செய்கிறது. தனக்காக இல்லாமல் பிறருக்காக முடிந்ததை செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது. எனவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சேர்ந்து சமூகப்பணியாற்ற வேண்டும். ஈகை, இரக்கம், பொதுநலன், சமத்துவம், மனிதநேயம் போன்ற உயர்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள தயாராக வேண்டும்' என்றார்.

கல்லூரி துணை முதல்வர்கள் எம்.முகமது முகைதீன், எம்.நாசர், பேராசிரியர்கள் டி.லெனின், ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முகாம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி, வரும் மார்ச் 04 ல் நிறைவடைகிறது. இதில், தூய்மைப் பணி, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், மரக்கன்று நடுதல், நீர்நிலை வாய்க்கால் சீரமைப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பித்தல், கருத்தரங்கம், கண் பரிசோதனை முகாம், பொது சுகாதாரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.

முகாமின் முதல் நாளான இன்று கீழத்தோட்ட கிராமப் பகுதிகளில் கிடந்த குப்பைகள், தேவையற்ற கழிவுகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.

முகாம் ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே. முத்துக்குமரவேல், எம் பழனிவேல், எஸ். சாபிரா பேகம், என்.சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

இம்முகாமில், கீழத்தோட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலா, கீழத்தோட்டம் கிராம பிரமுகர்கள், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
  
 
 
 
 
 
 
 
 
 

Monday, February 25, 2019

அதிராம்பட்டினத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்கள் பறிமுதல்!

அதிராம்பட்டினம், பிப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் போர்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் அறிவுரையின் பேரில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், மேற்பார்வையாளர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களின் உதவியோடு அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், ஈசிஆர் சாலை பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணியில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் மற்றும் 3 பேர் காயம் (படங்கள்)

பேராவூரணி பிப்.25-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் தேவதாஸ் ரோடு அருகே குமாரவேல் என்பவர் குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார்.

திங்கள்கிழமை மதியம் பள்ளி முடிந்து பள்ளி வேனில் குழந்தைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்திரா நகர் பூனைகுத்திப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது போது, வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் பேராவூரணி வீரமணி நகரைச் சேர்ந்த ராகவன்(வயது 29), உதவியாளர் நாடாகாடு பொற்செல்வி (வயது 42), இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. எல்கேஜி மாணவர்கள் ஆவணம் சிவராமன்(வயது 3), செங்கமங்கலம் ஸ்ரீ நிகாஷ் (வயது 3) ஆகியோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக பேராவூரணி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, அதிமுக ஒன்றியச் செயலாளர் உ.துரைமாணிக்கம், கோவி.இளங்கோ, பேரூராட்சி முன்னாள் பெருந்தலைவர் என்.அசோக்குமார், வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பரமானந்தம், உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ கூட்ட அரங்கில் மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளுதல் மற்றும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (25.02.2019) கலந்து கொண்டார். 

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது: -
எதிர்வரும் 2019 இந்திய நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தியுள்ளவாறு வாக்காளர் பட்டியலில் புதிதாக இளம் வாக்காளர்களை சேர்த்தல், வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்வதன் அவசியம், வாக்களிப்பதன் அவசியம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் படிக்காதவர்களை விட படித்தவர்கள் தான் அதிகம் வாக்களிப்பது இல்லை. 2009 இந்திய பொது தேர்தல் காட்டிலும், 2014 பொது தேர்தலில் கூடுதலான வாக்குப்பதிவு நடைபெற்று 75 சதவிகிதம் பதிவானது.  வாக்களிப்பதன் அவசியம் குறித்து இந்திய ஆணையத்தால் அறிவுறுத்தியபடி வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்காளர் சேர்க்கை குறித்து SVEEP எனப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 18 வயது பூர்ததியடைபவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்காகவும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை குறித்து விளக்குவதற்காகவும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் நேரடியாக சென்று ஆதார ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் அல்லது தேர்தல் ஆணையத்தின் இணைய தள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம். 18 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்த்துக்கொண்டு எதிர்வரும் தேர்தலில் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றிட வேண்டும். மேலும் மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தங்களது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு, விவிபேட் இயந்திரத்தின் செயல்பாடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் முறை ஆகியவை குறித்து மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டு மாணவ மாணவியர்களையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்து பார்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் அருணகிரி, மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்

அதிராம்பட்டினத்தில் புதிய ஏடிஎம் சேவை மையம் தொடக்கம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.25
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி கிளையின் 2-வது ஏடிஎம் சேவை மையம் பழஞ்செட்டித்தெரு பஸ் நிறுத்தம் அருகே (கூட்டுறவு வங்கி அருகில்) அமைந்துள்ள எம்.எம்.எஸ் முகமது யூசுப் கட்டிடத்தில் இன்று திங்கட்கிழமை முதல் தொடங்கியது.

இந்த வங்கியின் முதலாவது ஏடிஎம் சேவை மையம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் இயங்கி வருவது
குறிப்பிடத்தக்கது.