.

Pages

Friday, March 22, 2019

தண்ணீர்! தண்ணீர்!! தண்ணீர்!!!

அதிரை நியூஸ்: மார்ச் 22
'மூன்றாம் உலகப் போர் ஒன்று வருமானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்' என்று பலமுறை பல அறிஞர்கள் கூறி வந்திருக்கிறார்கள். ஆனாலும் கூட நாம் இன்றும் தண்ணீர் குறித்து தெளிவான பார்வையைக் கொண்டிருக்கவில்லை.

தண்ணீர்ப் பற்றாக்குறையும், மாசுபட்ட தண்ணீரும் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய கேடாக மாறும் நிலை ஏற்கனவே உருவாகிவிட்டது. உலக அளவில் 84.4 கோடி பேருக்கு சுகாதாரமான தண்ணீர் கிடைக்கவில்லை. மாசுபட்ட தண்ணீரால் ஒவ்வோராண்டும் உயிரிழப்போர் எண்ணிக்கையானது போர், விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தண்ணீரின் மகத்துவத்தையும், மக்கள் வாழ்வாதாரத்திற்குத் தண்ணீரின் முக்கியப் பங்கை உணர்த்தும் வகையிலும் ஐக்கிய நாட்டு சபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1993 ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22 ம் தேதியன்று உலகத் தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறதே தவிர, தண்ணீரின் முக்கியத்துவம் பற்றியோ, அதன் சேமிப்புப்பற்றியோ, அதன் சிக்கனப் பயன்பாடு பற்றியோ நாம் முழுமையாக உணர்வதாக இல்லை. ஐ.நா சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு தரும் தகவலின் படி, இன்று உலகின் 2.1 பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர். இந்நிலை அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. இதனால் மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.

'எந்த நாட்டில் ஓர் ஆண்டில் தனி நபருக்குக் கிடைக்கின்ற தண்ணீரின் அளவு 1,700 கன மீட்டருக்குக் குறைவாக உள்ளதோ, அங்குத் தண்ணீர்ப் பஞ்சம் உள்ளதாகக் கூறலாம்' என நீர்ப் பஞ்சம்பற்றிய அளவீடுகள் கூறுகின்றன. அந்த அளவீடுகளின் படிப் பார்த்தால், இந்தியாவில் ஏறத்தாழ 70 சதவீத மக்கள் கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தில் வாழ்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

தண்ணீர்ப் பஞ்சத்துக்கான காரணங்கள்தாம் என்ன? நாட்டின் உயிர் நாடியாக இருக்கின்ற சிறிய நீராதாரங்களான குளங்கள், ஏரிகள், குட்டைகளைச் சரிவரப் பராமரிக்காத காரணத்தால் இவற்றின் மூலம் கிடைக்கும் நீர் தொடர்ந்துக் குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, நீர் வரத்துப் பகுதிகளில் ஏற்படும் மண் அரிப்பால் அணைகளில் வண்டல் மண் சேர்ந்து அதன் கொள்ளளவு தொடந்துக் குறைந்து வருகிறது.

நீர்ப் பஞ்சத்துக்கான முக்கியமான காரணம் பருவகால மழைப் பொழிவு குறைவு. இந்தியாவின் பல மாநிலங்களில் பருவ நிலை மாற்றத்தால் மழை பொழியும் நாட்கள் குறைந்துள்ளன என்பதை இந்திய வானிலை மையத்தால் வெளியிடப்படும் மொத்த மழை பெய்யும் நாட்களின் புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

மழைப் பொழிவு குறைந்துள்ளதற்கான காரணம் பருவ நிலை மாற்றம் மட்டுமல்ல. காடுகள் அழிப்பும் ஒரு காரணம். சுயநலமிக்க சில மனிதக்கும்பல் தங்களின் சுய இலாபத்துக்காக மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்கின்றன. அதுமட்டுமின்றி, அவ்வப்போது ஏற்படும் காட்டுத்தீ காரணமாக மரங்கள் எரிந்து நாசமாகின்றன. அவ்வப்போது தோன்றும் புயலின் போதும் மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகின்றன.

தொழிற்சாலைகள் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மூலம் அதிகமாக வெளியிடப்படும் மாசு கலந்த கார்பன்டை ஆக்ஸைடால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. மழையளவு குறைவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

இதனைச் சரி செய்வதற்குப் புதிய மரங்களை நட்டுக் காடுகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நீராதாரங்களான குளங்களையும், ஏரிகளையும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவித்துத் தூர்வாரி நீரைச் சேமிக்க வழி செய்ய வேண்டும். நீரின் சிக்கனப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். இவைத் தொடர்பாக அரசு நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நம்முடைய பண்டைய தமிழ் இலக்கியங்களிலும் கூட நீரின் முக்கியத்துவம் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் ' குடபுலவியனார்' என்ற புலவர் பாடிய 'முழங்கு முந்நீர்' எனத் தொடங்கும் பாடல் இங்கு எண்ணற்குரியது. அப்பாடலில் புலவர் பாண்டிய நெடுஞ்செழியன் என்ற மன்னனுக்குக் கூறும் அறிவுரைகள் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாக அமைந்துள்ளன. புகழை நிலை நிறுத்த விரும்பும் மன்னருக்கு அதற்கான தகுதிப்பாடு யாது என்பதை எடுத்துரைக்கிறார் புலவர் பெருந்தகை. புகழை நிலை நிறுத்துவதற்கான ஒரே வழி நீர் வளம் பெருக்குதலே ஆகும் என்கிறார்.

ஒரு நாட்டில் பருவம் தவறாத மழைப் பொழிவு இருக்குமானால், அங்குத் தண்ணீர் பஞ்சத்துக்கு இடமேயில்லை. மழையின் அவசியத்தைக் கருதித்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவன் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த இரண்டாவதாக 'வான் சிறப்பு' என்ற அதிகாரத்தை வைத்தார்.

'வான் சிறப்பு' அதிகாரத்தின் முதல் குறளில் மழையை 'அமிர்தம்' எனச் சிறப்பிக்கிறார்.

'வான்நின்று உலகம் வழங்கி வருதலால் 
தான் அமிர்தம் என்றுணரற் பாற்று'

பெய்யாமல் மக்களைக் கெடுக்க வல்லதும் மழை; அவ்வாறு கெட்டவர்க்குத் துணையாக அமைந்து வாழ வைக்க வல்லதும் மழையே என்பதை

'கெடுப்பாதூஉங் கெட்டார்க்கு சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை'

என்ற குறள்வாயிலாக விளக்குகிறார். மழை இல்லையேல் நீரில்லை; நீர் இல்லையேல் இவ்வுலகில்லை என்ற தனது அழுத்தமான கருத்தை

'நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு'

என்ற வான் சிறப்பின் கடைசிக் குறள் வழியே வள்ளுவப் பெருந்தகை தெளிவுப்படுத்துகிறார்.

'உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்படும் இந்நாளில் தமிழ்  மூதாட்டி அவ்வையார் தொடர்பான ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். மன்னன் ஒருவனை வாழ்த்த விரும்பிய அவ்வையார் 'வரப்புயர' என்றார்.

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோல் உயரும்"

என்பதாக அமைகிறது அந்த வாழ்த்துப்பாடல் ஒரு ஆட்சியானது நல்லாட்சியாக அமைய வேண்டுமெனில் அந்த ஆட்சியில் நீர் மேலாண்மை சிறப்புற்று இருக்க வேண்டும்.என்ற கருத்தையே அவ்வையாரின் 'வரப்புயர' என்ற வாழ்த்துச் சொல் நமக்கு உணர்த்துகிறது.

கோடை நெருங்கி வரும் இந்நேரத்தில் இப்போதே காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நீர் சேமிப்பு, சிக்கனப்பயன்பாடு என்ற இரு விஷயங்களில் எல்லா தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.  "ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் நீரை வீண் விரயம் செய்யாதீர்கள்" என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி இங்கு நினைவுக் கூறத்தக்கது. ஆஸ்திரேலியாவில் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்று குடிநீர் பாட்டில்களிலும், கேன்களிலும் நபி பெருமானாரின் மேற்கண்ட பொன்மொழியைப் பொறித்து விநியோகம் செய்கிறது என்ற தகவல் நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.          

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.