.

Pages

Sunday, April 14, 2019

முஸ்லிம்களின் அரசியல் உரிமை பறிபோகிறதா?

அதிரை நியூஸ்: ஏப்.14
1984 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 543 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் முஸ்லிம்கள் 46 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் 2014 ம் ஆண்டு நடந்த நடந்த மக்களவைத் தேர்தலில் வெறும் 22 உறுப்பினர்களே இருந்தனர். மக்கள் தொகையில் 15 விழுக்காடு கொண்ட முஸ்லிம்கள் வெறும் 4 .2 சதவீத உறுப்பினர்களே இருந்தனர் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா? ஆனால்  பி.ஜெ.பி.யின் எண்ணிக்கை  282 உயர்ந்தது. அது எதனால் என்று பார்ப்போமேயானால் இந்திய மண்ணில் ஆட்சி செய்த காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவான கட்சி என்ற அவப்பெயரை இந்துக்களிடம் பரப்பியதினால் அந்த கட்சி மல, மல என்று வளரத் தொடங்கியது.  முஸ்லிம்கள் ஆதரவினை எப்போதுமே பெற்ற சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள் கூட முஸ்லிம் உறுப்பினர்களை இந்தியாவிலேயே அதிகமாக உள்ள உ.பி. மாநில 80 உறுப்பினர்களில் ஒருவர் கூட வெற்றி பெற உதவவில்லை. மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 22 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட மக்களவையில் செயலாற்ற முடியவில்லை. 1991 பதவியேற்ற நரசிம்மராவ் காங்கிரஸ் ஆட்சியில் தான் 1992 ம் ஆண்டு பழமை மிகு தொல்லியல் துறை முக்கியம் வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது கை கட்டி, வாய் பொத்தி காரிய மௌன சாமியாரானார் அன்றைய பிரதமர் என்பது உங்களுக்குத் தெரியும்.

16 மக்களவையில் முக்கிய முத்தலாக்கு, பசுவை பாது காப்போம் என்றும், பசுவைக் கொல்லும் முஸ்லிம்கள் என்று பல முஸ்லிம்கள் கொல்லப்படும்  உட்பட  பிரச்சனைகளில் கூட கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிய அளவிற்கு மற்ற கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பவில்லையே அது ஏன் என்று உங்களுக்கு புரிந்து இருக்கும். வருகின்ற மக்களவை தேர்தலில் இந்துக்களின் ஓட்டுக்களை இழக்க நேரிடும் என்ற அச்ச உணர்வுதான்.

தமிழ் நாட்டில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மைனாரிட்டி சமூகத்தினவருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரசில் முக்கிய தலைவருமான பீட்டர் அல்போன்சும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது உண்மைபோல தேனி மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெ.எம்.ஹாரூனுக்கு வழங்கப்படவில்லை, அத்துடன் தி.மு.காவில் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பு வழங்கப் படவில்லை என்ற ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்.

முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக கொண்ட கேரள மாநிலத்தில் ஒரு முஸ்லிம் அல்லது கிருத்துவர் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் காங்கிரஸ் தலைவரே நிற்பதிலிருந்து பீட்டர் அல்போன்ஸ் சொல்லுவது உண்மையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றவில்லையா உங்களுக்கு. தமிழகத்தில் முஸ்லிம் லீக்கு கட்சிக்கு ஒரு சீட் வழங்கி அதில் எத்தனையோ ஆரம்பகால ராமநாதபுரம் ஷாஜஹான் போன்ற உறுப்பினர் இருந்தாலும், அறிமுகமில்லா ஒருவருக்கு சீட்டு வழங்கியதால் தேவர் பெரும்பானமையினைக் கொண்ட இராமநாதபுர மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்து விடுவோமோ என்று உங்களுக்கு ஓர் அச்சமிருக்கத் தானே செய்யும்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின்பு கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் வாழ்வு மங்கி வருகின்றது வெள்ளிடைமலை தானே. காயிதே மில்லத் அவர்கள் குரோம்பேட்டை வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் 90 வயதான சுப்ரமணிய அய்யர் முஸ்லிம்  மக்கள் விரோத ஹிந்துக்களுக்கு ஒரு செய்தி சொல்லியுள்ளார். அவர் போன்று ஒரு பரந்த அண்ணன்-தம்பி உறவு கொண்ட ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. அவர் வீட்டுக்குள் நான் சென்று வர ஒரு சகோதரனைப் போன்ற அனுமதி வழங்கியிருந்தார் என்றும், அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு தான் மயங்கி விழுந்து விட்டதாகவும் சொல்லியுள்ளார்.

அவ்வாறு முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அண்ணன் தம்பியாக வாழ்ந்த தமிழகத்தில் முஸ்லிம்களிடையே உத்தரபிரதேசம் போன்று ஒருவித பய உணர்வினை ஏற்படுத்த பி.ஜெ.பி. முயலுவதாக அதனுடைய தலைவர்கள் பேச்சிலிருந்து தெரியவில்லையா? ஆனால் முஸ்லிம் அமைப்புகளிடையே கிட்டத்தட்ட 19  பிரிவுகளாக நிர்கதியாக உள்ளனர். காயிதே மில்லத் வானில் மின்னும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். போர்ப்படை தளபதியாக இருந்தார். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லும்போது முன்னின்று நடத்துவார்கள். ரசூலுல்லாஹ் போருக்கு செல்லாத நேரத்தில் தன் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புவார்கள்.

ஒரு தடவை அப்துல் இபின் ரவாதா அவர்களை போருக்கு முன்னின்று நடத்துமாறு கூறினார்கள். போர் படை வீரர்கள் எல்லாம் புறப்பட்டு சென்று விட்டார்கள். ஆனால் அப்துல் இபின் ராவதா போருக்கு செல்லு முன்பு ரசூலுல்லாஹ் முன்னின்று நடத்தும் ஜும்மாவினில் கலந்துவிட்டு செல்லலாம் என்று ஜும்மாவில் கடைசி ஸப்பில் நின்றார்கள். ரசூலுல்லாஹ் தொழுகை முடிந்ததும் அப்துல் இபின் அவர்களை பார்த்து விட்டு, ஏன் நீங்கள் இன்னும் புறப்படவில்லையா என்று கேட்டபோது அவர் சொன்ன விளக்கத்தினை ஏற்க மறுத்து, ஒரு தலைவர் முன்னின்று போர் வீரர்களை வழி நடத்துவது ஜும்மா தொழுவதினை விட மேலானது என்று கூறினார்களாம். ஆனால் தமிழ்நாட்டில் முஸ்லிம் லீகிற்கு ஒரு உறுப்பினர் தேர்வாக வாய்ப்பு இருக்கும்போது அதன் தலைவர் அதனை நழுவி விடுவாரோ என்று அவர் தேர்தெடுத்த வேட்பாளர் இருக்கின்றார் என்று பலரும் ஆதங்கப் படுகின்றனர்.

ரசூலுல்லாஹ் கட்டளையினை ஏற்று காலித் பின் வாலித் அவர்கள் போருக்கு சென்று விட்டு வெற்றியுடன் திரும்பும் பொது அவரை வரவேற்க ரசூலுல்லாஹ் எதிர்நோக்கி இருக்கும்போது முதலில் படை வீரர்கள் வந்தனர். அதனை பார்த்த ரசூலுல்லாஹ் காலித் அவர்கள் எங்கே என்று கேட்கும்போது, அவர் பின்னால் நிற்பதினை பார்த்து, 'காலித் அவர்களே, பெரிய வெற்றியுடன் வரும்போது கம்பீரமாக முன்னாள் வரவில்லையே' என்று கேட்டதிற்கு, காலித் அவர்கள், 'ரஸூலல்லாஹ்வே, போர் வீரர்கள் பல வகையினைச் சார்ந்தவர்கள். போருக்கு செல்லும்போது அவர்களுக்கு முன்னோடியாக நான் வழி நடத்தி சென்றேன். வெற்றி பெற்று திரும்பும்போது எதிரிகள் பல திசைகளிருந்து தாக்கினால் நமது வீரர்கள் சிதறி விடக்கூடாது என்று நான் அவர்களுக்கு பின்னல்' வந்தேன் என்கிறார்களாம். அவ்வாறு ஒருங்கிணைக்கும் முஸ்லிம் தலைவர்கள் நம்மிடையே இல்லாதது ஒரு இழப்புதானே!

ஒரு தடவை சஹாபி ஒருவர் ரசூலுல்லாஹ் அவர்களிடம் வந்து, 'தனக்கு மன அமைதி இல்லாமல் இருக்கின்றது என்றாராம்' அதற்கு ரசூலுல்லாஹ் அவர்கள், 'இன்று இரவு உணவு உண்ணும்போது உன் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கி எழுந்து வந்து' காலையில் சொல்லும் என்கிறார்களாம். சகாபியும் ரசூலுல்லாஹ் வார்த்தையினைக் கேட்டு பல நாட்கள் இல்லாத வகையில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு பின்பு நிம்மதியாக தூங்கி எழுந்து வந்து, ' ரசூலுல்லாஹ் அவர்களே இன்று நான் மன அமைதி பெற்றேன்' என்றாராம்.

ஆகவே முஸ்லிம் சகோதர அமைப்புகள் பல பிரிவுகளாக பிரிந்து சிறுசிறு கருத்து வேற்றுமைக்காவாகவும், யார் பெரியவர், எந்த அமைப்பு அதிக உறுப்பினர் கொண்டுள்ளது, யார் பணத்தினை அள்ளி இறைக்கின்றாரே அவரிடம் சோரம் போய், ஒரு சமுதாயத்தினையே அடகு வைப்பது போன்ற செயல்களால், நம்முடைய அரசியல் உரிமை, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, தொழில் தொடங்குவதிலிருந்து பின்னடைவு, சில வளைகுடா நாடுகளின் பணத்திற்காக இளைஞர்கள் உயர்  படிப்பினை தொடராது மிகவும் சிரமப் படும் பரிதாப நிலை, ஏழை முஸ்லிம்கள் வாழ்வாதாரம் இன்றி மூலையில் முடங்கி விடுதல், முதியோர் புறக்கணிப்பு போன்றவை நடந்து கொண்டுள்ளன.

பல சமுதாய அமைப்புகள் கொண்ட எந்த சமூகமும் இனி முன்னேற முடியாது. ஆகவே தான், பி.ஜெ.பி. அமைப்பினர் இந்துக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்ய நினைக்கின்றனர். முஸ்லிம்களும் வேற்றுமையினை வேரறுத்து இனியாவது ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்போமா!

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓய்வு)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி 
எழுத்தாளர்  
சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.