Pages

Saturday, September 21, 2019

133 ஆண்டுகளுக்கு முன் அதிரையின் ஓர் பக்க வரலாறு - சிறு அலசல்!

அதிரை நியூஸ்: செப்.21
சமீபத்தில் அதிராம்பட்டினம் 'ஜாவியாத்துஷ் ஷாதுலியா' என்கிற தரீக்கா சார்பாக 'அவ்ராது பூஞ்சோலை' என்கிற நூல் ஒன்று வெளியிட்டது. அந்த நூலின் ஒரேயொரு பக்கத்தில் ஜாவியா நிலம் இன்றிலிருந்து சுமார் 133 ஆண்டுகளுக்கு முன் அதாவது 1886 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தஸ்தாவேஜு படியெடுக்கப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

அந்த பத்திர தஸ்தாவேஜூ பக்கத்தில் காணப்படும் நம்ம ஊரோடு சம்பந்தப்பட்ட சில வரலாற்று செய்திகளை மட்டும் பிரித்தெடுத்து சிறுகூடுதல் தகவல்களுடன் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

1. பத்திரம் 1886 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. (அதாவது 133 ஆண்டுகளுக்கு முன்)

2. 1886 ஆம் ஆண்டு அதாவது ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலும் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியாகவே நம்ம ஊர் அதிராம்பட்டினம் இருந்துள்ளது.

3. கீழத்தெரு அன்றைய காலத்திலும் இதே பெயருடன் இருந்துள்ளதுடன் ஏரிப்புறக்கரைக்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்துள்ளது.

4. இந்த ஏரிப்புறக்கரை கிராமம் மோகனாம்பாள் சத்திரம் என்ற பகுதிக்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. அந்த மோகனாம்பாள் சத்திரம் இப்போது எது? எங்கே?

5. மொத்த ஜாவியா நிலத்தின் அன்றைய மதிப்பு ரூபாய் 250/- மட்டுமே. (மயக்கம் வருதா?)

6. ஜாவியாவிற்கு தென்புறமுள்ள ரோடு அதாவது ஜும்ஆ பள்ளியிலிருந்து கடைத்தெரு வழியாக மெயின்ரோடு செல்லும் சாலை 'ராஜவீதி' என அழைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பீரமான பெயர் எப்படி காணாமல் போனது என்பது ஆச்சரியமே!

7. ஜாவியா முன்புறமுள்ள (மேற்குப்புற) சாலை துறைமுக ரஸ்தா என அழைக்கப்பட்டுள்ளது.

நமது கூடுதல் விளக்கம்:
நமதூர் கடற்கரை ராஜேந்திர சோழன் காலத்தில் அவருடைய கடற்படை தளங்களில் ஒன்றாக இருந்துள்ளதுடன் நமதூர் மரக்கல ஆயர்கள் (மரைக்காயர்கள்) நீண்டகாலம் கடலோடி வணிகம் செய்த பகுதியுமாகும்.

மரைக்காயர்களின் நல்ல தோணிக்கள் (சரக்குகளை சுமந்து செல்லும் சிறுகப்பல்கள் / படகுகள்) எல்லாம் கள்ளத் தோணிகளாக அறிவிக்கப்பட்டு ஆங்கிலேயர்களால் கடல் வணிகம் அபகரிக்கப்பட்டாலும் தொடர்ந்து வெள்ளையர்கள் காலத்திலும் அதிரை ஒரு வணிகத் துறைமுகமாகவே திகழ்ந்துள்ளது.

ரயில்வே கேட் இறக்கத்தில் உப்பளம் செல்லும் வழியில் ஆங்கிலேயர் காலத்தில் கஸ்டம்ஸ் அலுவலகமாக இருந்த மிகப்பெரும் தகரக் கொட்டகை ஒன்று சமீப ஆண்டுகளுக்கு முன் தான் தடம் தெரியாமல் அழிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கஸ்டம்ஸ் கொட்டகைப் பகுதி தற்போதும் "ரேவடி" என நம்ம கடற்கரை தெரு மக்களால் அழைக்கப்படுவதுடன் இது இலங்கையிலிருந்து வந்த சொல்லாக இருக்கலாம் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

8. ஆங்கிலேயர் காலத்தில் அதிரையிலும் இஸ்லாமியர்கள் *முகம்மது மதம் / முஹம்மதியர்கள்" என தவறாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், முஸ்லீம்கள் என்பதற்கு பதிலாக 'சோனகர்' என விளிக்கப்பட்டுள்ளனர். இதுவோர் உலக வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட சொல்லாகும்.

ஆங்கிலத்தில் மூர் (Moor / Moors) என்றழைக்கப்படுவதன் தமிழ்ப்பதமே 'சோனகர் / சோனகர்கள்' என்பதாகும். இது தற்போதும் இலங்கையில் நடைமுறையில் உயிரோட்டத்துடன் உள்ளது.

கேரளத்தை ஆண்ட சாமுத்திரி மன்னனின் மெய்க்காவலர்களாகவும், படைத்தளபதிகளாகவும் சிறந்து விளங்கியவர்கள் *மரைக்காயர்கள்* இவர்கள் சாமுத்திரி மன்னனின் ஆதரவோடு மிகப்பெரும் கடலோடிகளாகவும், கடல்கடந்து வணிகம் செய்வோராகவும் செழித்து விளங்கினர்.

நியூஸிலாந்து நாட்டின் ஒரு பழங்குடி மக்களிடமிருந்து "மொய்தீன் கப்பல் மணி" என தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டது மரைக்காயர்களின் கடல் வணிக வல்லமையுடன் தொடர்புபடுத்தி பார்க்கத்தக்கது.

மரைக்காயர்கள் நமது அண்டை நாடான இலங்கையிலிருந்து சோனகர் / மூர் என்கிற சொல்லையும் நம் தமிழகத்திற்குள்ளும் இறக்குமதி செய்தனர். உதாரணமாக சென்னையிலுள்ள மூர் தெரு, மூர் மார்க்கெட் போன்றவை.

போர்த்துகீசிய ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லீம்களை ஒழிப்பதை தங்களின் ஆட்சியின் ஒரு முக்கிய குறிக்கோளாகவே கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவே முஸ்லீம்கள் மூர் / சோனகர் என்ற பெயருக்குள் ஒழிந்து கொண்டதாக இலங்கையில் ஒரு கருத்து நிலவுகிறது.

போர்த்துகீசியர்கள் "ஓலந்தர்கள்" என இலங்கையில் தமிழ் பேசும் மக்களால் அழைக்கப்படுகின்றனர்.

இந்த சோனக வரலாறு ஸ்பெயினை ஆண்ட கொடுங்கோலர்களான ராணி இஸபெல்லா மற்றும் அவளது கணவரும் மன்னருமான பெர்டினாண்ட் வரை நீண்டு செல்கின்றது என்பதால் அந்த வரலாற்றை மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்.

தொடர்புடைய வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு அதிரை நியூஸ் வாசகர்களிடம் அன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.

ஆய்வு: அதிரை அமீன்
 

2 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும்.

  1. 1965ல் கடற்கரைக்கு போகும் வழியில் கூறை இல்லாத, சற்று உயரமான கட்டிடம் ஒன்று இருந்தது.
  விசாரித்ததில் அந்தககாலத்தில், அது கடலோடி வியாபாரிகள் சரக்குகளை இறக்கி் வைக்கும் இடம் என்றும் அது சிதைந்து விட்டதாகவும் சொன்னார்கள்.

  2. பழைய கடலூரில் (OT) மரைக்கார்கள் அதிகம் வாழும் "சோனகர் தெரு" உள்ளது.
  அங்குள்ள சிலருக்கு நம் ஊரில் பழைய சொந்தம் உள்ளது.

  +

  ReplyDelete
 2. அல்ஹம்துலில்லாஹ். அருமையான பதிவு.
  நான் ஹமீது மரைக்காயர். பரங்கிப்பேட்டை என்கிற மஹ்மூத்பந்தர்.
  எங்கள் ஊரினைப் பற்றிய முதல் மற்றும் ஒரே புத்தகத்தை சென்ற வருடம் வெளியிட்டோம்.
  ( மஹ்மூதுபந்தர் முஸ்லிம்கள் - ஒரு பார்வையும் பதிவும் )
  இது போல் நமது வேர்கள் குறித்த தேடல் உணர்வாளர்கள் சற்றே ஒன்றிணையலாமே.
  வழிகள் சொல்லுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவானாக.
  எனது எண் : 98943 21527 abuprincess@gmail.com

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...