Pages

Monday, February 17, 2020

அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் பிப்.19 ந் தேதி மின்தடை!

அதிராம்பட்டினம், பிப்.17
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் (பிப்.19) புதன்கிழமை மின்சார விநியோகம் இருக்காது.

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், அத்திவெட்டி, பெரியக்கோட்டை, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, காடந்தங்குடி, துவரங்குறிச்சி, தாமரங்கோட்டை, மதுக்கூர் நகர், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் பிப்.19 ந் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 70)

அதிரை நியூஸ்: பிப்.17
அதிராம்பட்டினம், மேலத்தெரு மல்லியப்பூ வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும்,  ஜமால் முகமது அவர்களின் சகோதரியும், மர்ஹூம் மன்சூர் அவர்களின் தாயாரும், துரை என்கிற அப்துல் காதர் அவர்களின் மாமியாரும், ஜாஹிர் உசேன், அப்துல் காதர், முகமது இலியாஸ் ஆகியோரின் சிறிய தாயாருமாகிய மஹபூபா (வயது 70) அவர்கள் இன்று பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (18-02-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ஷிஃபா மருத்துவமனையில் பிப்.19 ந் தேதி இலவச கண் அறுவை சிகிச்சை ~ பரிசோதனை முகாம்!

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் எதிர்வரும் (19-02-2020) அன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில், மதுரை அரவிந்த் கண் மருத்துவக்குழுவினரால் கண் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, கண்புரை அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படும் நபர்கள் மதுரை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் நோய் பாதிப்புக்குள்ளான, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் தொடர்புக்கு:
9952201631 / 9442038961 / 04373 242324 / 6374176350


ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி மாணவர்களின் ஒரு நாள் கல்விச் சுற்றுலா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா சென்று வந்தனர்.

சுற்றுலா தலங்களின் முக்கியத்துவம், வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளித் தாளாளர் என். உதயகுமார் தலைமையில், மாணவர்கள் ~ ஆசிரியர்கள் உள்ளிட்ட 80 பேர் தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார சுற்றுலாப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள அரண்மனை, பூங்கா, மியூசியம், சரஸ்வதி மஹால் நூலகம், பெரிய கோவில், வடுவூர் பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு மகிழ்ந்தனர்.

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் FC ஜூனியர் அணிக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், பிப்.17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பில், மாவட்ட அளவிலான 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிராம்பட்டினத்தில் கடந்த பிப்.15ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், அதிராம்பட்டினம், கரம்பயம், பட்டுக்கோட்டை, கண்டனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதி போட்டியில் உள்ளூர் அணிகள் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் ஆகிய இரு அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில், இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலை பெற்று இருந்தனர். பின்னர், இரு அணிகளுக்கும் டைபிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி 4-3 என்ற கணக்கில் கோல் அடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றனர். முதல் பரிசாக ரூ.4004 ரொக்கம் மற்றும் கோப்பை பரிசளிக்கப்பட்டன. தொடர் போட்டியில் அதிராம்பட்டினம் ஏ.எப்.எப்.ஏ ஜூனியர் அணி இரண்டாமிடமும், கண்டனூர் அணி மூன்றாமிடமும், பட்டுக்கோட்டை அணி நான்காமிடமும் பிடித்தனர். இந்த அணிகளுக்கு முறையே ரூ.3003, ரூ.2002, ரூ.1001 ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில், நடந்த பாராட்டு விழாவில் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, சாதனை நிகழ்த்திய அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் எப்.சி ஜூனியர் அணி வீரர்கள் ஜுபைர் (கேப்டன்), அபூபக்கர் (கோல் கீப்பர்), இம்ரான், அல்வாஸ், ராசித், ரியாஸ், ஜசிம், ஹாசிம், சுஹைல், காதர், உஜைர், அலி (கோல் கீப்பர்), அக்மல், அஸிம், பாஸித், ஹசன், அணி பயிற்றுநர் லியாகத் அலி, அணி மேலாளர் மஹ்சின் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

Sunday, February 16, 2020

ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.16
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்ற ஒற்றை கோரிக்கையை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் என்.எம்.எஸ் ஷாஃபீர் அகமது தலைமை வகித்தார். அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எல்.அஸ்கர், அக்கட்சியின் ஊடகப் பிரிவின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜெ அசார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அக்கட்சியின் ஏரிப்புறக்கரை ஊராட்சி வார்டு கவுன்சிலர் சி. அகமது வரவேற்றார். அக்கட்சியின், மாநிலச் செயலாளர் என். சஃபியா நிஜாம், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என். முகமது புஹாரி, வழக்குரைஞர் இசட். முகமது தம்பி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக பேரணியாக புறப்பட்டுச்சென்று பேருந்து நிலையம் வந்தனர். பின்னர் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.எப்.ஐ அமைப்பின் விதைகள் கலைக்குழுவினர், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.


வண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத்தில் பேரணி ~ ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.16
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர் சாதிக் பாட்சா, முகமது தமீம், அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழுத் தலைவர் நெய்னா முகமது,  உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், எம்.நசுருதீன் சாலிகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைனுல் ஆப்தீன் கண்டன உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளி முக்கத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை வழியாக 'சி.ஏ.ஏ வை திரும்பப்பெறு', 'என்.ஆர்.சி ஐ புறக்கணி' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டுச்சென்று பேருந்து நிலையம் வந்தனர். இதில், இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டு சென்றனர்.

பின்னர் பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது நடத்திய தடியடியைக் கண்டித்தும்,  மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் முழக்கமிட்டனர். நிறைவில் நசுருதீன் நன்றி கூறினார்.
 

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...