.

Pages

Sunday, May 31, 2020

ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தொக்காலிக்காடு அணைக்கட்டு புனரமைக்கும் பணி!

கோப்புப்படம்
அதிராம்பட்டினம், மே 31
தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநிலக் கோட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காலிக்காடு கிராமத்தில் தொக்காலிக்காடு அணைக்கட்டில் நீரின் வேகம் குறைக்கும் கல் அமைக்கும் பணி மற்றும் வழங்கு வாய்க்கால் தடுப்புச் சுவர் புனரமைக்கும் பணிக்காக ரூ.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழக அரசின் குடிமராமத்து திட்டப்பணிகள் 2020-2021, கல்லனைக் கால்வாய் கோட்டம், அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி புனரமைக்கும் பணிக்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முடுக்குக்காடு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ சி.வி சேகர் நிவாரண உதவி வழங்கி ஆறுதல் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 31
அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரம் ஊராட்சி முடுக்குக்காடு பகுதி தனபால் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடு முழுவதும் பற்றி எரிந்து சாம்பலானது.

இது குறித்து தகவல் அறிந்ததும், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்  எம்எல்ஏ சி.வி சேகர், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

அப்போது, அதிமுக பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் பி.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் சுப. ராஜேந்திரன், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் ஏ.பிச்சை, துணைச் செயலாளர் எம்.ஏ முகமது தமீம், வீ.சேதுராமன், முன்னாள் கவுன்சிலர் கே.சிவக்குமார், ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தஞ்சை மாவட்டம்: அனுமதி, தளர்வுகள், கட்டுப்பாடுகள் (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மே.31
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (31.05.2020) கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் எடுத்துரைத்தார். வணிக நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் கொரானா தொற்று நிலமையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவானது 30.06.2020 நள்ளிரவு 12 மணிவரை நீட்டிப்பு செய்து நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கும் மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் ரிசார்ட்டுகள் பிற விருந்தோம்பல் சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது எனினும் மருத்துவத்துறை, காவல்துறை, அரசுஅலுவலர்கள் தனிமைப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது.

வணிக வளாகங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. பள்ளிகள்,கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது எனினும் இந்நிறுவனங்கள் இணையவழி கல்வி கற்றல் தொடரலாம்.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பொது அரங்குகள, கூட்ட அரங்குகள், சுற்றுலாதளங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

அனைத்து வகையான சமுதாய அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் நோய் தொற்றின் தன்மைக்கேற்றவாறு தமிழக அரசின் அறிவுறுத்தலின் படியும் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அனைத்து சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

மாநில பேருந்து போக்குவரத்தை 01.06.2020 முதல் நடைமுறைப் படுத்தும் பொருட்டு அரசின் சார்பில் எட்டு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அதில் தஞ்சாவூர் மாவட்டம் நான்காவது மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. நான்காவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட இடங்கள் தவிர மண்டலங்களுக்கு இடையிலும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி தடைசெய்யபட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மண்டலத்துக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் தேவை இல்லை .

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியே பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து வகையான வாகனங்களும் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு இயக்க அனுமதிக்கப்படுகிறது அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.

வெளி மாநிலங்கள் சென்று வரவும் வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரவும் மற்றும் பிறமண்டலங்கள் இடையே சென்றுவரவும் இ -பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். எனினும், இயன்றவரை வீட்டிலிருந்து பணிபுரிவதைதனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும். வணிகவளாகங்களை தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரியகடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரேநேரத்தில் அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே கடைக்குள் இருக்க வேண்டும். கடைகளில் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக் கூடாது.

07.06.2020 வரை டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் காய்கறிகடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கிட அனுமதிக்கப்படுகிறது.

08.06.2020 முதல் உணவகங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்து உணவு அருந்திட அனுமதி அளிக்கப்படுகிறது. மொத்த  இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது. நோய்க் கட்டுப்பாட்டுபகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்விததளர்வுகளுமின்றி முழுமையாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய மற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்கிடலாம். வுhடகை மற்றும் டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது.ஆட்டோக்களில்; ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எந்தவித மானதளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். அனைத்து தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் பணியாளர்களை வீட்டிலிருந்த படிபணிபுரிய ஊக்குவிப்பதோடு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் இ- பாஸ் அனுமதியில்லாமல் தனியார் போக்குவரத்துக்கு அரசினால் அனுமதிக்கப்பட்டாலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்கள் இந்நோய்த் தொற்றைதடுக்கும் வகையில் அவர்களது பகுதிக்குள் பிரவேசிப்பவர்கள் மீது குறிப்பாக வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் போன்ற வெளிநபர்கள் உள்ளே பிரவேசிக்க தேவையான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தற்காலிக முகாமில் தங்கியுள்ள ஆதரவற்றோர் குறைகள் கேட்பு: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை!

அதிரை நியூஸ்: மே.31
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து, கொரோனா ஊரடங்கின் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல முடியாத ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி வளாக தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் உணவு, மருத்துவ வசதி மற்றும் இதர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், அவர்களுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கிடவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்லும் வரை, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து தருமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிராம்பட்டினத்தில் மஜக சார்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 31
மனிதநேய ஜனநாயக கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், 10 ஆண்டுகள் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் அக்கட்சியினர் அவரவர் வீட்டு வாசல்களில் பதாகை ஏந்தி நின்று போராட்டம் நடத்தினர்.

இதில், அக்கட்சியின், அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள் அப்துல் சமது, அதிரை சேக், அஸ்ரப், மர்ஜூக் மற்றும் பலர் பங்கேற்றனர்.
 

Saturday, May 30, 2020

கரோனா: தஞ்சை மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 79 ஆக உயர்ந்ததால், தற்போது சிகிச்சையில் 9 பேர் மட்டுமே உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 88 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஏற்கெனவே 76 பேர் வெவ்வேறு நாள்களில் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் சிகிச்சை பெற்று குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. இன்னும் 9 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் பழங்கள், குணமடைந்ததற்கான சான்றிதழ் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் குணமடைந்து வீடு செல்லும் நபர்கள்; தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை:

Date No. of Cases Discharged
16.04.2020  1
21.04.2020  3
23.04.2020  3
24.04.2020  1
25.04.2020  10
27.04.2020  6
28.04.2020  9
29.04.2020  2
01.05.2020  3
03.05.2020  3
04.05.2020 2
07.05.2020 1
08.05.2020 1
09.05.2020 1
12.05.2020 1
13.05.2020 6
14.05.2020 2
15.05.2020 1
16.05.2020 6
17.05.2020 2
18.05.2020 2
22.05.2020 1
26.05.2020 2
27.05.2020 2
28.05.2020 5
30.05.2020 3
     TOTAL 79

மறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப்பு!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72). தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்வியை போதித்தவர். அனைவராலும் 'தமிழ்அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர்.

அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை, மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn  என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு,  நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி (மொழிபெயர்ப்பு), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து (மொழிபெயர்ப்பு), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி (ஸல்) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள், மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் 35 நூல்களை எழுதி உள்ளார்.

அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,.     ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி உள்ளார். பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கவிஞர் முடியரசன் தலைமைமையில் கவியரங்கம், சென்னை காயிதே மில்லத் அரங்கு மீலாதுக் கவியரங்கம், ‘கவிக்கோ’ தலைமையில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘ரமழான்’ கவியரங்கு, 1972 – முதலாம் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு, திருச்சி, 2007 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏழாவது மாநாடு, சென்னை,  2010 -  இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் 15 வது மாநாடு, அதிரை, 2011 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது மாநாடு, காயல்பட்டினம்  ஆகிய கருத்தரங்குகள், மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

காரைக்கால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாபநாசத்தில் நடந்த மாநாட்டில், தமிழ் இலக்கியச் சேவைக்காக, அதிராம்பட்டினம் தமிழ்அறிஞர் அதிரை அஹமத் அவர்கட்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவரது எழுத்துச்சேவையைப் பாராட்டி, அதிராம்பட்டினம் சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் இணையதள ஊடகம், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினத்தில் நடத்திய கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், சிறந்த எழுத்தாளருக்கான விருதினை, தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சேக்கனா எம். நிஜாமுதீன்
(ஆசிரியர், அதிரை நியூஸ்)

அதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் (72) காலமானார்!

அதிரை நியூஸ்: மே 30
அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72).
தமிழ் இலக்கியம் மீது அதிக ஆர்வம் கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை மகளிர் அரபிக் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்விப்பணியை போதித்தவர். தமிழ்மாமணி விருது பெற்ற இவர் அனைவராலும் 'தமிழறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர். இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் காலாமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (30-05-2020) பகல் 1 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு: தொழுகையில் இஸ்லாமியர்கள் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: மே 30
அமெரிக்கா கலிபோர்னியாவில் பள்ளிவாசல் மீண்டும் திறப்பு. வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் பங்கேற்பு.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமெரிக்காவில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம் வல்லெஹோ நகரில் மூடப்பட்டிருந்த இஸ்லாமிக் சென்டர் தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டன. இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்மா சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த தலா 100 பேர் வீதம் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி, 2 மணி, 3 மணி ஆகிய 3 வேளைகளில் தனித்தனியாகத் தொழுகை நடத்தப்பட்டன. இதில், அனைவரும் முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டனர்.
 

Friday, May 29, 2020

தஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!

அதிரை நியூஸ்: மே 29
தஞ்சை மாவட்ட ஊரகப் பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திள்ளார்.

108 அவசரகால வாகனப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்!

அதிரை நியூஸ்: மே 29
108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (29.05.2020) வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் இருபத்து நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றி வரும் 116 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என  ரூபாய் இரண்டாயிரம் மதிப்பிலான உதவிப் பொருட்களை அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். கொரோனா தடுப்புப்பணியில் முன்களத்திலிருந்து பணியாற்றிவரும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. முத்து மீனாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

E- PASS ஐ தவறாகப் பயன்படுத்திய 3 பேர் கைது!

அதிரை நியூஸ்: மே 29
வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான இ - பாஸை தவறாகப் பயன்படுத்திய மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெனரால்டு என்பவர் நாகப்பட்டினத்திலிருந்து கார் மூலம் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸை சென்னையிலிருந்து திரும்பும்போது கும்பகோணத்தை சேர்ந்த நபர்களை அழைத்து வருவதற்காக தவறாக பயன்படுத்தியுள்ளார்.

இதைப்போன்று, கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த பிளக்ஸ் நிர்மல் மற்றும் சங்கர் ஆகிய இரு நபர்கள் சென்னை செல்வதற்காக வாங்கிய இ-பாஸில் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட இரண்டு நபர்கள் கூடுதலாக அழைத்துச் சென்றுள்ளனர். மேற்காணும் காரணங்களுக்காக, மூன்று நபர்களும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, ஊரடங்கு காலத்தின்போது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்றிட வழங்கப்படும் இ - பாஸ்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீதும், கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்பவர்கள் மீதும், இ - பாஸில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தில் ஆட்டு இறைச்சி ரூ.600 க்கு விற்பனை!

அதிராம்பட்டினம், மே.29
அதிராம்பட்டினத்தில் கடந்த சில மாதங்களாக ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி தற்போது அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி நிஜாம் மட்டன் ஸ்டாலில் ரூ.600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் கே. ராஜிக் முகமது கூறியது;
'ரூ.700 க்கு விற்கப்பட்டு வந்த ஆட்டு இறைச்சி இன்று (29-05-2020) வெள்ளிக்கிழமை முதல் ரூ.600 க்கு விற்கப்படுகிறது. எங்களது விற்பனையகத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் சலுகை விலையில் ஆட்டு இறைச்சி வழங்கப்படும். அதனடிப்படையில் தற்போது  ரூ.100 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விலை விற்பனை எங்களிடமிருந்து மறு அறிவிப்பு வரும் வரை தொடரும்' என்றார்.

மரண அறிவிப்பு ~ என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52)

அதிரை நியூஸ்: மே.29
அதிராம்பட்டினம், மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி என்.எம்.எஸ் முகமது சுல்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் கோல்டன் என்.எம்.எஸ் ஜமால் முகமது, கே. ஜாஹிர் உசேன் ஆகியோரின் மைத்துனரும், என்.எம்.எஸ் சேக் பரீது அவர்களின் சகோதரருமாகிய என்.எம்.எஸ் நத்தர்ஷா (வயது 52) அவர்கள் நேற்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-05-2020) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, May 28, 2020

ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவை செய்யும் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மானுக்கு பாராட்டு!

மல்லிபட்டினம், மே 28
ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவை செய்யும் மருத்துவர் சே.ஜியாவுர் ரஹ்மானுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் புதுமனைத்தெருவைச் சேர்ந்தவர் சே. ஜியாவூர் ரஹ்மான் (25). அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.சேக் அப்துல் காதர் மகன் ஆவார். இவர், எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு, மல்லிபட்டினம் பகுதி மக்களுக்கு மருத்துவ சேவையாற்றி வருகிறார்.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தொடங்கியதும் பெரும்பாலான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தங்களது கிளினிக்குகளை மூடிவிட்டு வீட்டில் ஓய்வில் இருந்து வந்த நிலையில், இதற்கு மாறாக, மருத்துவ சிகிச்சைக்காக தன்னிடம் வரும் ஏழை மக்கள், முதியோர், ஆதரவற்றோர், கூலித்தொழிலாளிகள் உள்ளிட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து, உரிய ஆலோசனை வழங்கி வருகிறார் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மான். இதற்காக, நோயாளிகளிடம் எவ்வித மருத்துவக் கட்டணமும் வசூலிப்பதில்லை. அவர்களை பரிசோதனை செய்து மருந்துகள் மட்டும் எழுதிக் கொடுத்து வருகிறார்.

சாதி, மதம், இனம் என எவ்வித பாகுபாடின்றி அனைவருக்கும் எந்நேரமும் இன்முகத்தோடு மருத்துவச் சிகிச்சை அளிக்கிறார். அவசர சிகிச்சைக்காக நோயாளிகளின் வீடுகளுக்கு தேடிச் சென்றும் சிகிச்சை அளிக்கும் இவர், கரோனா காலத்தில் இதுவரையில் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் மக்களின் சிரமங்களை அறிந்து இலவசமாக சிகிச்சை அளிக்கும் டாக்டர் சே.ஜியாவுர் ரஹ்மானின் ஓய்வில்லா மருத்துவச் சேவையைப் பாராட்டி மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து வரும் நிலையில், இவருக்கு காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68)

அதிரை நியூஸ்: மே 28
அதிராம்பட்டினம், செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ந முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், ஹாஜி எஸ்.எம்.ஓ அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் செய்யது புஹாரி அவர்களின் சகோதரியும், ஏ.ஜெ நெய்னா முகமது, ஏ.ஜெ ஆபிதீன், ஏ.ஜெ சகாபுதீன் ஆகியோரின் தாயாருமாகிய வரிசை வீட்டு ஹாஜிமா அகமது அம்மாள் (வயது 68) அவர்கள் இன்று பிற்பகல் சிஎம்பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-05-2020) இரவு 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Wednesday, May 27, 2020

பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு QR CODE மூலம் பாஸ் வழங்கல்!

பட்டுக்கோட்டை, மே.27
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று (27.05.2020) புதன்கிழமை முதல் QR CODE மூலம் ஸ்கேன் செய்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு பாஸ் (PASS) வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும் முறையை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர். ராமு தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தேவையற்ற ஒன்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் உறவினர்களின் நடமாட்டம் தடுக்கப்பட்டு, மருத்துவமனையில் சமூக விலகலைக் கடைபிடிப்பது எளிதாகும்.

இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியக் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகள் உடனிருப்போர் கலந்துகொண்டனர்.

அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு!

அதிராம்பட்டினம், மே.27
அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம் புதுமனைத்தெரு ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வளாகத்தில் 26-5-2020 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். இதில், அதிராம்பட்டினம் பில்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணைத்தலைவர்களாக பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், கந்தசாமி, செயலாளராக எச். முகமது இப்ராஹீம், துணைச்செயலாளர்களாக அபூதாஹிர், கார்த்திகேயன், முகமது சாலிகு, மக்கள் தொடர்பு அலுவலர்களாக அய்யாவு, ஏ.கே சாகுல்ஹமீது, ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக அப்துல் ரஹீம், ஹலீமுதீன், செல்வ விநாயகம், ஆனந்தன், அபூபக்கர், அகமது ஹாஜா, நாகராஜ், புருகானுதீன், அகமது இப்ராஹிம், தீனுல் ஹக், செயற்குழு உறுப்பினர்களாக ஏ.டபுள்யூ தமீமுல் அன்சாரி, சேக் அப்துல்லா, சகாபுதீன், ஏகநாதன், ரீபா தீன், கே. தமீம் அன்சாரி, சாதுலி, அப்துல் பர்ஹான், தெளபீக் அகமது, எல்.எம்.எஸ் முகமது யூசுப், எம். தமீம் அன்சாரி, ஏ.கே சேக் நசுருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் அடுத்த ஆலோசனைக்கூட்டம் எதிர்வரும் (01-06-2020) அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Tuesday, May 26, 2020

தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மே.26
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை  வட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும்,  வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் இன்று (26.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் வட்டம், வாளமர்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் வடசேரி வாய்க்கால் தூர்வாரும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் வாளமர்கோட்டை வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி, தஞ்சாவூர் வட்டம், காட்டூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், தென்னமநாட்டில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் கல்யாண ஓடை கால்வாய் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம்,  தெலுங்கன்குடிகாட்டில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருமங்கலக்கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், பேய்கரும்பன்கோட்டையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் அய்யனார்குளம் தூர்வாரும் பணி, ஒரத்தநாடு வட்டம், நெம்மேலியில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணி,

பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வடகாடு வாய்க்கால் 7 கிமீ நீள அளவில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சக்குடி ஏரி தூர்வாரும் பணி ஆகிய பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதற்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை; விரைவாகவும், தரமாகவும் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் இருபுறமும் கரைகளை பலப்படுத்தி, சமன்படுத்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

பின்னர், சிறப்பு கண்காணிப்பு அலுவலர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அனைத்து பாசன கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களையும் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக ரூபாய் 567 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடிமராமத்து பணிகளுக்காக சுமார் 500 கோடி ரூபாயும், தூர்வாரும் பணிகளுக்காக சுமார் 67 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 274 தூர்வாரும் பணிகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 137 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், டெல்டா பகுதிகளுக்கு வருவதற்கு முன்னர், அனைத்து பாசன கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை கண்காணித்திட காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடைமடை பகுதிகள் முழுவதும் தண்ணீர் சென்றிடும் வகையில் ஜூன் 12-ம் தேதிக்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை முடிப்பதே அரசின் நோக்கமாகும். இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின், பயிற்சி ஆட்சியர் அமித்  மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பின்னர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் குடிமராமத்து மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 195.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3670 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் பொதுப்பணித்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 109 ஏரிகள் சீரமைப்பு பணிகளும், வருடாந்திர தூர்வாரும் திட்டத்தின் கீழ் 944 கிமீ நீள அளவிலான 165 கால்வாய் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 118697 ஹெக்டேர்ஸ் நிலம் பாசன வசதி பெறவுள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 608 குளங்கள் மற்றும் ஊரணிகள், அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் குழுக்கள் மூலமாக தலா ஒரு லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்படவுள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 647 கிமீ நீள அளவிலான 336 வாய்க்கால்கள், 9053 கிமீ நீள அளவிலான 2452 சிறுபாசன வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாக முடித்திட வேண்டும். இவ்வாறு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.
 

அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை புனரமைக்கும் பணிகள் ஆய்வு!

அதிராம்பட்டினம் மஞ்சக்குடி ஏரி மதகுகள், சறுக்கை புனரமைக்கும் பணிகள் ஆய்வின் போது
அதிரை நியூஸ்: மே. 26
பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வடகாடு வாய்க்கால் 7 கிமீ நீள அளவில் தூர்வாரும் பணி, பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் மஞ்சக்குடி ஏரி தூர்வாரும் பணி ஆகிய பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான ககன்தீப்சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் வருவதற்குள் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் இருபுறமும் கரைகளை பலப்படுத்தி, சமன்படுத்திடுமாறு பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.

ஆடு, மாடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்க சமூக ஆர்வலர் கோரிக்கை!

ஏ. சாகுல் ஹமீது
அதிராம்பட்டினம், மே 26
வறட்சி காலங்களில் ஆடு, மாடுகளை பாதுகாக்க ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினமும் ஒரு வாளி தண்ணீர் வழங்க வேண்டும் என அதிராம்பட்டினம் சமூக ஆர்வலர் ஏ.சாகுல் ஹமீது கோரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் போன்ற பகுதிகளில் அதிகமான வெயில் அடிப்பதாலும், குளங்களில் தண்ணீர் இல்லாததாலும் அதிகமான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி தத்தளித்து வருகின்றது. வாயில்லா ஜீவன்களை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தினந்தோறும் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தால் நன்மை பெறுவதோடு மட்டும் அல்லாமல் கால்நடைகளின் பிரார்த்தனையும் நமக்கு கிடைக்கும். ஆகவே இந்த கோடை காலங்களில் மனிதர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைப்பது போன்று கால்நடைகளுக்கு தண்ணிர் வழங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85)

அதிரை நியூஸ்: மே.26
அதிராம்பட்டினம், நடுத்தெரு கூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் கு.நா.மு  முகம்மது மிஸ்கின் அவர்களின் மகனும், புலவர் அப்பா வீட்டு மர்ஹூம் அகமது  ஹாஜா அவர்களின் மருமகனும், மர்ஹும் கு.நா.மு அப்துல் லத்தீப், கு.நா.மு அபுபக்கர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் சலாம், அப்துல் ரஹும், முகமது சம்சுதீன் ஆகியோரின் மாமனாரும், அப்துல் பத்தாஹ் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி முகமது மீரா சாஹிப் (வயது 85) அவர்கள் இன்று செட்டித்தெரு இல்லத்தில்  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-05-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.