Pages

Monday, May 4, 2020

தஞ்சை மாவட்டத்தில் என்னென்ன இயங்க அனுமதி (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மே.04
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளில் எவ்வித தளர்வுமின்றி தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவானது 04.05.2020 முதல் 17.05.2020 நள்ளிரவு 12.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள், திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள். அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள். பொதுமக்களுக்கான விமான, இரயில், பொது போக்குவரத்து, டாக்ஸி, ஆட்டோ, மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பொதுமக்கள் போக்குவரத்து, தங்கும் விடுதிகள் (பணியாளர்கள் விடுதிகள் தவிர) தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து இதர பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமானப்பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டுமானப்பணிகள் மற்றும் சாலைப்பணிகள் அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலக்டிரீசியன், ஏ.சி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுய திறன் பணியாளர்கள், வீட்டு வேலைப்பணியாளர்கள், சிறப்பு தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம். அனைத்து அச்சகங்களும் (Printing Press) இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்படும். (டீ கடைகள் தவிர்த்து) அனைத்து தனிக்கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப்பொருட்கள், சானிட்டரிவேர், மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக்கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஊரகப்பகுதிகளிலும், நகரப்பகுதிகளான மாநகராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும், மொபைல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணிப்பொறி, வீட்டு உபயோகப்பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி கடைகள் உள்ளிட்ட தனிக்கடைகள் (பெரிய வணிக நிறுவனங்கள் (மால்), குளிர்சாதன வசதியுடன் கூடிய பெரிய கடைகள், முடி திருத்தும் மற்றும் அழகு கலை கடைகள் தவிர்த்து) காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். இ-காமர்ஸ் வாயிலாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தற்போதுள்ள நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும்.

ஏற்கனவே அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள் (Agri Processing) தொழில் மற்றும் வணிக செயல்பாடுகளும், மருத்துவப்பணிகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஏ.டி.எம். மற்றும் ஆதரவற்ற இல்லங்கள் ஆகியவை எவ்வித தங்கு தடையுமின்றி முழுமையாக செயல்படலாம், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கிருமி நாசினி மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு தொடர்வதால், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது. மேலும் அரசின் உத்தரவுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

கனிமம் மற்றும் சுரங்கப்பணிகள், கட்டுமானப்பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.

பேருராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகள் கட்டுமானப் பணிகளைத் தொடங்க பணியாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும். நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிறுவனத்தின் பிரத்யேக பேருந்துகள், வேன்கள் மூலம் அழைத்து வரவேண்டும். அந்த வாகனங்களில் 50 சதவீத அளவிற்கு மட்டுமே தக்க தனி நபர் இடைவெளியைக் கடைபிடித்து ஊழியர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். (பதிவுத்துறை அலுவலகங்கள் உட்பட). மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி 06.05.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும். ஒத்துழைப்பையும் நல்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...