.

Pages

Thursday, July 23, 2020

ஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
கல்வியெனும் கண்ணைத் திறந்து மாணாவர்களை மாண்புடையோராய் மிளிரச்செய்யும் ஒரு அரும்பணி ஆசிரியப்பணி. ஊர் போற்றும் ஒரு நல்லாசிரியராக என்றென்றும் திகழ்ந்தவர் ஹாஜி S.K.M ஹாஜா முகைதீன் அவர்கள். இவர், தனது 80 வது வயதில் அதிராம்பட்டினத்தில் இன்று 23-07-2020 வஃபாத்தானார்.

இவர் ஒரு கல்வியாளராக மட்டும் இருந்ததில்லை. சமுக ஆர்வலராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் என பன்முகத்திறனுடன் வலம் வந்தவர். தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதின் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பில் இருந்து, தனது 58 வது வயதில் பணி நிறைவு பெற்றார். கணிதப்பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியம் மீது கொண்டுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் வாசகர்களின் நன்மதிப்பை பெற்றவை.

ஆசிரியப்பணியின் போது, இவர் எழுதி இயக்கிய ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் (வினாடி-வினா) வானொலியில் ஒலிப்பரப்பாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘உமறுப்புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருக்கிறார். அதேபோல் வாசிப்பை நேசித்தவர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவை குறிப்பிடதக்கது ஆகும்.

அன்னையர் அன்புக்கு ஈடிணையுண்டோ?, குடியரசைக் கொண்டாடுவோம்!
குழந்தைகளைக் கொண்டாடுவோம் ~ குழந்தைகள் தினம், என்றும் நினைவில் வாழும் 'கல்வித்தந்தை' ஹாஜி S.M.S ஷேக் ஜலாலுதீன்!, ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர்!, இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு !, உழைப்பின்றி உயர்வில்லை!, மறைந்து வரும் மனிதநேயம் !, மகளிருக்கு மாண்பளித்த மாநபி !, தேசிய இளைஞர் தினம் ~ இளைஞர்களும்; சமூக எழுச்சியும், வாழ்வின் வெற்றி !,
என்னைச் செதுக்கிய ஆசிரியச்சிற்பிகள்', கல்வி வளர்ச்சி நாள்,
'உழைப்பாளர் தினம்', உலக மகளிர் தினம்: ஜஹானாரா பேகம் - சிறப்பு பார்வை, 'நல்லாசிரியர்' தேர்வு செய்யும் தகுதி பெற்றவர்கள் மாணவர்கள் மட்டுமே, மதச்சாயம் பூசி மறைக்கப் பட்ட வரலாறு – நூலாய்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 'அதிரை நியூஸ்' இணைய ஊடகத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு தரப்பினரை கவர்ந்தவை மட்டுமல்ல, இக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்பது அவரது இறுதி ஆசையாக இருந்தது.

மாணவர்களின் படிப்பிலும் மட்டுமல்லாமல் அவர்களின் ஒழுக்கத்திலும் அதிகக்கவனம் செலுத்தியவர். எளிமையின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தார். இளம் ஆசிரியர்களின் ஆசானாகத் திகழ்ந்தவர்.

பள்ளிகளில் நடந்து வரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவரது முன்னாள் மாணவர்கள் பலர் இவரது அருமை, பெருமைகளை பேசாத நாட்களே இல்லை எனலாம். இவர் ஆற்றிய கல்வித்தொண்டு குறித்து நெஞ்சம் நெகிழும் மலரும் நினைவுகளை மாணவர்கள் மேடைகளில் பகிர்ந்து கொள்வர்.

பணி நிறைவுக்கு பின் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை அர்பணித்துக்கொண்டார். குறிப்பாக, அதிரை பைத்துல்மால் சேவையகத்தில் துணைத்தலைவராக இருந்து பல்வேறு சமூகப்பணிகளை தனது இறுதி மூச்சு உள்ளவரை ஆற்றியவர். நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருப்பாளராக இருந்து மாணவர்களின் கல்வித்தரம் உயரவும், பள்ளியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உறுதுணையாக இருந்தவர்.

பணி ஓய்வுக் காலத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடக்கும் கல்வி, விளையாட்டு, கருத்தரங்கம், பட்டிமன்றம், குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி பரிசளித்து பாராட்டியவர்.

தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் கல்வித்துறையால் இரு முறை விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டும், விருது கை நழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே!

ஊரின் கல்வியின் அடையாளமாகத் திகழ்ந்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு 'அதிரை நியூஸ் கல்வி - மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவை தலைமை ஏற்று நடத்தியவர்.

எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் பாவங்களை மன்னித்து, நல் அமல்களை ஏற்று, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவருக்கும் வல்ல இறைவன் பொறுமையை வழங்குவானாக!

முன்னாள் மாணவர் சேக்கனா எம். நிஜாமுதீன்
(ஆசிரியர், அதிரை நியூஸ்)

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.