.

Pages

Monday, September 14, 2020

பிலால் நகரின் அருமை பெருமைகள்: ஒரு வரலாற்று பார்வை!

பிலால் நகர் மஸ்ஜித்தின் எழில்மிகு தோற்றம்

அதிரை நியூஸ்: செப்.14
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரையில் அமைந்துள்ள பிலால் நகர் புதிதாக உருவாகியதோர் இளமையான, வளரும் குடியிருப்பு பகுதியாகும். 

இரண்டு வெவ்வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களை இரட்டை குடியுரிமையாளர்கள் என்போம் அல்லவா அதேபோல் பிலால் நகர் அரசு நிர்வாக ரீதியாக ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதிக்குள்ளும், இதர தேவைகளும் கலாச்சார தொடர்புகளும் அதிராம்பட்டினம் பகுதிக்குள்ளும் அமைந்துள்ளதால் பிலால் நகர்வாசிகளும் ஒரு வகையில் "மினி இரட்டை குடியுரிமை" பெற்றவர் போன்ற சிறப்புக்குரியவர்களே!

பிலால் நகர் எனும் பெயர் சூட்டப்படுமுன் இந்த பகுதியின் பெயர் நண்டுவெட்டி வெப்பல் சுருக்கமாக வெப்பல் என அழைப்பார்கள். 

ஹஜ்ரத் பிலால் ரலி. நகர் என பெயர் சூட்டியது, இங்கு ஆரம்பத்தில் குடியேறியவர்களில் ஒருவரும், இங்கு பால் பண்ணை நடத்தியவருமான மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அம்பு அஹமது ஜலாலுதீன் அவர்கள் ஆவர். இவர்களுக்கு அன்றைய இளைஞர்கள் துணை நின்றனர். மேலும் தனிநபர் ஒருவரின் பெயரை சூட்டும் முயற்சியையும் முறியடித்தனர்.

பிலால் நகர் என பெயரிட்ட போது அன்றைய ஆரம்ப குடியிருப்புகளாக இருந்த அம்பு அஹமது ஜலாலுதீன் அவர்கள் தான் வசித்த பகுதிக்கு 'வள்ளல் காதிர் முகைதீன் லேன் - 1' என்றும், இன்றைய ஜமாத் தலைவர் முகைதீன் காக்கா, ஜமாத் பொருளாளர் சேக்கனா நிஜாம் ஆகியோர் வசிக்கும் பகுதிக்கு 'வள்ளல் காதிர் முகைதீன் லேன் - 2' எனவும் துணை பெயர் சூட்டி அதிரையின் கல்வித்தந்தை காதிர் முகைதீன் அப்பா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தார். எனினும் இப்பெயர்கள் கால ஓட்டத்தில் நிலைபெறாமல் போயிற்று.

குடியேற்றங்கள் பெருகி வந்த நிலையில் தேவையை உணர்ந்து இடுப்புக்கட்டி வகையறாவை சேர்ந்த மர்ஹூம் முஹமது அபூபக்கர் தலைமையில், எம்.பீர் முகமது, சேக்தாவூது உள்ளிட்ட அப்பகுதி குடியிருப்பு இளைஞர்கள் பலர் அயராது பாடுபட்டு ஓலைக்குடிசையால் அமைந்த அல்லாஹ்வின் மஸ்ஜித் ஒன்றை கட்டியெழுப்பினர். மஸ்ஜித் உருவான அன்றைய வருடமே புனிதமிகு ரமலான் மாதத்தில் தான் உருவாக்கிய பள்ளியிலேயே மர்ஹூம் முஹமது அபூபக்கர் உயிர் நீத்தார்கள், அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று அவர்களின் பிழை பொருத்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிற்குரிய நல்லடியாராக உயர்த்துவானாக.

பின்னாளில் இக்குடிசை பள்ளிக்கு மாற்றாக அன்னாரின் மருமகனாரும் முத்தவல்லியுமான அஹமது கபீர் அவர்களின் தலைமையின் கீழ் அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த ஜாஃபர் சாதிக், தமீம் அன்சாரி சகோதரர்கள், சிராஜுதீன், சகாபுதீன் உள்ளிட்ட பலரின் ஒத்துழைப்பின் கீழ் கட்டிட பள்ளியாக உருவெடுத்தது அல்ஹம்துலில்லாஹ். (பிலால் பள்ளி பற்றிய முழு விபரங்கள் விரைவில் தனிப்பதிவாக வரும் இன்ஷா அல்லாஹ்)

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தோராயமாக 45 ஆண்டுகளுக்கு முன் பிலால் நகரில் தான் தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் (நள்ளிரவில்) உரையாற்றினார். அதிரையில் அதிமுக என்ற (புதிய) கட்சியின் பெயரில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் காதிர் முகைதீன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற பிரமாண்டமான தப்லீக் இஜ்திமாவின் போது பிலால் நகர் பகுதிகளும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இஜ்திமாவின் தண்ணீர் தேவை மற்றும் ஒழுச் செய்வதற்கு காலேஜ் பிரதான நுழைவாயில் முதல் பிலால் நகர் வரை அருகேயுள்ள வாய்க்காலின் இருபுறமும் சென்ட்ரிங் பலகைகள்

அடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. அப்போது இந்த வாய்க்காலும் அதன் தண்ணீரும் மிகவும் சுத்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரிய ஏரி, சின்ன ஏரி ஆகியவற்றிலிருந்து வெளியாகி இந்த வாய்க்காலில் ஓடிய சுத்தமான நீரில் நமதூர் மக்கள் விரும்பி குளித்து வந்தனர் மேலும் இதன் கரை ஓரங்களில் தாழை மரங்கள் பெருமளவில் வளர்ந்திருந்தன.

தாழைமர இலைகள் கறி வாங்க பயன்படும் ஒமல்/உமல் செய்யவும், தாழம்பூ பெண்களின் தலை அலங்காரத்திற்கும், தாழங்காய் குழைகள் திருமண வீட்டு பந்தல் அலங்காரத்திற்கும் பயன்பட்டுவந்தன, இன்று தாழை மரங்கள் நமது ஊரிலேயே இல்லாமல் அழிந்துவிட்டது. தாழம்பூவிற்குள் "பூ நாகம்* என்கிற அரியவகை சிறுபாம்பு இருக்கும் என பெண்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம்.

கா.மு. கல்லூரி விடுதி மாணவர்கள் மற்றும் என்.சி.சி பயிற்சி படையினரின் தேவைக்காக ஓர் பெரிய கிணறும் பிலால் நகரில் செடியன்குளம் அஞ்சாங்கரை (ஐந்தாம் கரை)யிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தோண்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது.

என்.சி.சி. மாணவர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக செடியன்குளம் காடு அருகே குறிபார்த்து சுடும் ஒரு பிரமாண்டமான சுவர் கட்டப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இப்போதும் அச்சுவற்றின் சிதிலங்கள் எஞ்சியுள்ளன.

நியூ சினிமா என்கிற பெயரில் ஒரு டூரிங் டாக்கீஸ் சினிமா கொட்டகை (தியேட்டர்) ஒன்றும் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் இயங்கியது. இங்கு ஒருமுறை ரசிகர்களுக்கு இடையே பெரிய கைகலப்பு, அடிதடி சம்பவமும் நிகழ்ந்து அடங்கியது.

சலவை தொழில் செய்வோர் இங்கு ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடி தேங்கிய சதுப்புநில நீர்வழி பாதைகளின் ஓரங்களில் இருந்து ஓர்மண் எனப்படும் ஒருவகை பட்டு மண்ணை எடுத்து துணிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர்.

அதிரையில் செத்துவிழும் ஆடு மாடுகள் பெரும்பாலும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டு வந்தன. அடக்கம் செய்பவர்கள் அதன் தோல்களை மேளங்கள் செய்வதற்கு உரித்து எடுத்து செல்வார்கள் எனக் கேள்வி.

பிலால் நகர் குடியேற்றப் பகுதியாகும் முன் ரயில்வே கேட்டை ஒட்டிய மூலைப் பகுதியில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. இன்னொரு பகுதி சதுப்பு நிலமாகவும் கருவங்காடாகவும் இருந்தது. இங்கு சிறார்கள் கண்ணி வைத்து கொக்கு பிடித்து விளையாடி மகிழ்ந்ததும் ஒரு காலம்.

விவசாயம் நடைபெற்று வந்த பகுதியை ஒட்டியே முஸ்லீம்கள் தானமாக வழங்கிய நிலங்களில் ஆதி திராவிட மக்கள் சிலர் வாழ்ந்து வந்தனர், அவர்களின் வழிதோன்றல்கள் இன்னும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆதி திராவிட சமுதாய மக்கள் விவசாயப் பணிகள் போக சலவை தொழிலிலும் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். மேலும் அதிரை மக்களையே பெரிதும் சார்ந்து வாழ்ந்தனர். இவர்கள் கைபடாத திருமண சமையலே இல்லை என்ற ஒருநிலையும் இருந்தது.

அதேபோல் செடியன்குளம் ஐந்தாம் கரையிலிருந்து பெண்கள் கரை பகுதி வரை அதன் இறக்கத்தில் அடர்த்தியான காடும் இருந்தது. இதில் விளாம் பழம், சீத்தா, அழிஞ்சி, கருவை, மஞ்சள் நோனா, அத்தி, தாழை, பனை உள்ளிட்ட ஏராளமான மரங்களும் செடி கொடிகளும், பல்லின பறவைகள், அணில் உள்ளிட்ட சிற்றுயிர்களும் சூழ்ந்து வாழ்ந்து வந்தன.

தொகுப்பு:
அதிரை அமீன் 
S. அப்துல் காதர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.